Tamil words

 பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் 'பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்' என்பதாகும். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து வந்தவர்களே இக்காலத்தில் 'பண்டாரம்' என்னும் சைவ மதம் சார்ந்த சாதியராவர்.


-தொ.ப


சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுக்களின் வழியே வெளிப்டுத்துகின்றது.


-தொப


துறவிக்கு செவ்வாடை என்பது பௌத்த மதம் தந்ததாகும். 


பௌத்த மதம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது.


பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருள்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று.


-தொ.ப


தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் 'பட்டிமண்டபம்' என்ற கலைவடிவம் பௌத்த மதத்திலிருந்து பிறந்தது. பிற மதவாதிகளோடு வாதம் நடத்தி வென்று தங்கள் மதத்தைப் பரப்புவது பௌத்தத் துறவிகளின் வழக்கம்.


-தொ.ப


இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் உலகில் சூறாவளியாகக் 'கடமை,  கண்ணியம், கட்டுப்பாடு' ஆகிய சொற்கள் உருவெடுத்தன. இவை புத்தம், தர்மம், சங்கம் ஆகிய பௌத்த மும்மைக் கோட்பாட்டின் மறுபிறவியேயாகும் என்பதை கூர்ந்து சிந்தித்தால் உணரலாம்.


-தொ.ப


கும்மாயம் என்பது காரைக்குடி, செட்டிநாட்டு வீடுகளில் செய்து உண்ணக்கூடிய ஒரு வகை இனிப்புப் பலகாரமாகும் . கும்மாயம் ஆடி மாதத்தில் செய்து பெருமாளுக்கு படைத்தது உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும்.[1]


இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும் . ஆடி மாத இறுதியில் கும்மாயமானது தயாரித்து உண்ணப்படுகிறது . இதனை 'கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சேர்த்து பருகி' என்று முதல் திருமொழியில் பெரியாழ்வார் பாடியுள்ளார். [2]


'பள்ளி' என்ற சொல்லுக்குப் படுக்கை என்று பொருள். 'பள்ளியறை' என்றால் படுக்கையறை. 'பள்ளி கொள்ளுதல்' என்றால் உறங்குதல்.


-தொ.ப


'ஞானதானம்' செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு ஆடையில்லாத் துறவிகள்  அழைத்து கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறு இடம் கிடையாது. பள்ளித் தளத்தின் (கற்படுக்கைகளின்) மீதுதான் அமர்ந்திருக்க இயலும். பள்ளிகளின் மீது பிள்ளைகள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று.


-தொ.ப


கல்லூரி என்பது இன்று உயர்கல்வி நிலையத்தை குறிக்கிறது. 'கல்லூரி நற்கொட்டிலா' என்ற சீவக சிந்தாமணித் தொடரிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டது. சிந்தாமணி சமண நூலாகும்.


-தொ.ப


சமணர்கள் எட்டு நாள் (அட்டேபவாசம்), பதினாறு நாள் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கம் உடையவர்கள்.


-தொ.ப


பிற்காலச் சமணத்தில் கல்விக்கென்றே 'வாக்தேவி' என்ற தெய்வமும் பிறந்தது. இதுவே வைதிக நெறியின் 'சரஸ்வதி'க்கு முன்னோடியாகும் என அறிஞர்கள் கருதுவர். 'சரஸ்வதி'க்குரிய வெள்ளுடை என்பது சமணப் பெண் துறவிகளின் 'வெள்ளையாடை' (சுவேதாம்பரம்) மரபிலிருந்து வந்ததாக இருக்கலாம்.


-தொ.ப


புலால் உண்ணாமையை ஓர் அறமாகக் கற்பித்ததும் சமண மதமே. புலால் தவிர்ந்த உணவு சைவ உணவு என வழங்கப்படுகிறது. ஈழத்தில் அதற்கு 'ஆரத உணவு' என்று பெயர். ஆரதர் என்பது ஆருகதர் (அருகன் அடியாரான சமணர்) என்ற சொல்லின் திரிபு.


-தொ.ப


அஞ்சு வண்ணம் என்ற சொல் முதன்முதலில் தமிழ்க் கல்வெட்டுக்களில்தான் காணப்படுகிறது. அஞ்சு வண்ணப்பேறு என்பது அஞ்சுவண்ணத்தார் மீது விதிக்கப்பட்ட ஒருவித வரியினைக் குறிப்பிடுகின்றது போலும். எனவே அஞ்சு வண்ணத்தார் கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் வணிகம் செய்த 'இசுலாமிய வணிகக் குழுவினர்' என்று தெரிகிறது.


-தொ.ப


திகம்பர சமணத் துறவியர் சில மரப்பட்டைப் பொடிகளை வாயில் இட்டுக் கொள்வதைத் தவிர அவர்கள் பல் விளக்குவதில்லை; எனவே 'ஊத்தை வாயர்' என்று தேவாரம் அவர்களை குறிப்பிடுகின்றது.


-தொ.ப


திகம்பர சமணத் துறவியர் உடம்பிலுள்ள அத்தனை மயிர்க்கால்களையும் (புருவத்திலும், இமையிலும் உள்ள மயிரையும் கூட) கையினால் பறித்தெடுக்கும் 'லோச்சனம்' என்னும் நோன்பினையும் நோற்றிருக்கிறார்கள்.


-தொ.ப


நவீனப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் வரை இறப்புச் செய்தி தெரிந்தது முதல் இறந்தவரை அடக்கம் செய்வது வரை உள்ள கால இடைவெளி பெரிதாக இருக்கும். இறந்தவர் உடலை பசியோடு சென்று அடக்கம் செய்து முடித்தவுடன், மிகுந்த களைப்பினை அடைவது இயல்பாகும். அப்போது கையில் வாங்கிச் சாப்பிடும் அளவு சிறு உணவுப் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். இவ்வாறு வழங்கப்படும் உணவிற்கே 'காட்டுப் பண்டம்' என்று பெயர்.


-தொ.ப

Comments

Popular posts from this blog

Tamil units of measurement

Indian Laws in Tamil

தமிழ் விடுகதை விளையாட்டு 400